Wednesday, October 26, 2011

அங்கும் இங்கும்

S.சிவகுமார்

காஷியரின் கூப்பாடுகளும், இடையில் ப்யூன் காமேஷின் வேலையைத் தவிர்க்கும் தந்திர யுக்திகளும், டோக்கனைப் பெற்றுக் கொண்டு அசாத்தியப் பொறுமையுடன் காத்திருக்கும் சர்வ ஜனக் கூட்டமும், சொல்வதைக் காதில் வாங்காமல் கணினிப் பெட்டியின் மீதே முழுகவனத்தையும் வைத்திருக்கும் கிளார்க் ராமானுஜத்தின் போக்கும் – எங்கள் வங்கிக் கிளையில் அன்றாடம் கடைப்பிடிக்கப்படும் நியதிகள். இது போலவே காலையில் வந்தவுடன் அயராது குறைப்பட்டுக் கொள்ளும் மாடபூசி சீதாராம அய்யங்கார் – “என்ன வேலை செஞ்சு என்ன? ப்ரமோஷன் என்ன ஆறதுன்னே தெரியலியே?இவர் மூத்த மேலாளர். “இந்த நேரத்துக்குள்ளே ஏ ஜி எம் ஆகியிருக்கணும்னா பார்த்துக்குங்கஎன்ற ஒரு ரூபக தாள பல்லவியை பாடித் தவித்து, நம்மையும் தவிக்க வைப்பவர். சில சமயம் வரும் வாடிக்கையாளர்களிடமும், தமது சுய சரிதையை விவரிக்க ஆரம்பித்துவிடுவார். இவர் என்ன பெரிய மகாத்மா காந்தியா?

அன்று ஞாயிற்றுக் கிழமை. வாடிக்கையாளர்கள் 8.30 முதல் 9.30 வரையில் யாரையுமே பெரிதாகக் காணாது. 9.30 க்கு சீரியல் பார்த்துக் கொண்டோ அல்லது வேறு நிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டோ இருப்பவர்கள், ஆஹா நாளைக்கு திங்கட்கிழமை இல்லையோ, பாங்க் லீவாச்சே, பணத்தை எடுத்துடணுமே என்று உடனே புறப்பட்டு வரும் வகைதான் அதிகம். அவ்வளவாக தெருவுக்குத் தெரு ஏடிஎம் கள் இல்லாத காலம். வி ஆர் அட் தெ மெர்சி ஆஃப் தெ பாங்க் என்ற அங்கலாய்ப்புடனேயே வருவார்கள்.

உட்கார்ந்து கொண்டேயிருந்த காரணத்தால் சோம்பல் ஏற்பட சற்றே எழுந்து நின்றேன். வாடிக்கையாளர்கள் மீது சட்டென ஒரு பார்வை. ஒரு பெரியவர், அந்த டிபிகல் வில்லேஜர் என்பார்களே, அந்தத் தோற்றம். நன்றாக நீலம் ஏறிய வெள்ளை உடுப்பு. அடர்த்தியான நரைத்த முடி, மீசையும் சேர்த்துத்தான். உடம்பில் எண்ணைப் பசை. வயலில் செய்யும் உடலுழுழைப்பைத் தவமாகச் செய்து வளர்த்திய உடம்பு. வங்கி திறந்த பொழுதே இவரும் நுழைந்து விட்டார் என்பது என் முடிவு. அப்படியே ஏதோ சிந்தனையுடன் தேமேனென்று உட்கார்ந்திருந்தார். அமைதி காத்தல் நன்றன்று என்பதைச் சற்றும் உணராதவர் போல. வெளியில் சென்று அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தை அடைந்து என்னவென்று கேட்டேன். ஒரு பழைய மடிக்கப்பட்ட பாஸ் புக்கைக் காட்டி, “இதுல காசிருந்தா வேணுமுங்கஎன்றார். எண்ணைக் கூறி அதே ராமானுஜத்திடம் 4150 ரூபாய் உள்ளது என்றறிந்தேன். கணக்கு வி கஜபதி என்ற பெயரில் இருந்தது.

இவ்வளவு ரூபா இருக்குங்க, கணக்கு உங்களுதா? என்றேன்.

கிடைத்த பதில்கணக்கு கொண்டவனோட அப்பா நானு

என் சந்தேகத்தைப் புரிந்து கொண்டவர் போல கைப்பையிலிருந்த ஒரு காகிதத்தைச் சட்டென்று எடுத்து, “இதை வேண்ணா பாருங்கஎன்று என்னிடம் நீட்டினார்.

அது சுடுகாட்டில் அரசாங்கத் தரப்பில் கொடுக்கப்பட்ட எரியூட்டு கட்டண ரசீது. இறந்தவர் பெயர் வி கஜபதி என்றும் அதில் உள்ள நிலையான இருப்பிடம் பாஸ் புக்கில் உள்ளதாகவே இருந்தது. சுடுகாட்டில் பணம் செலுத்தியவர் பெயர் வெங்கடாசலம், உறவு முறை தகப்பனார் என்றும் எழுதப்பட்டு இருந்தது.

“நீங்க.....வெங்கடாசலமா?என்று நான் முடிப்பதற்குள் ரேஷன் கார்ட் நிரூபணம் கொடுக்கப்பட்டது. மற்றபடி எனக்கு அவகாசமே கொடுக்காமல், இவை இரண்டின் ஜெராக்ஸையும் தயாராய் வைத்திருந்தார். அவரை உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே சென்றேன், எந்த உத்தரவாதமும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. ஐந்து நிமிடத்தில் பாங்கின் அலுவல் நேரம் முடிந்தது. நீங்க அங்கேயே உட்காரலாம் என்பதாக பெரியவருக்கும் செய்கை காட்டினேன்.

அவ்தார் சிங் கபூர் (நாங்கள் அழைப்பது கபூர் சாப் என்று) தான் எனக்கு அடுத்த உயர் அதிகாரி. ஊர் அமிர்த்ஸர். ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டு, தமிழின் மீதும் தமிழனின் மீதும் தீராத காதல் கொண்டு இங்கேயே வாழ்பவர். தமிழ் உச்சரிப்பு மிகச் சரியான முறையில் இருக்கும். சில தனியார் தொலைக் காட்சிகளிலும் எஃப்எம் அலைவரிசைகளிலும் தமிழைப் பேசியே கொல்லும் இனத்தவர், இவரிடம் ஓரிரு பாடங்களைக் கற்கலாம்.

சொல்லுங்கோ ஜிஎன்றார்.

விளக்கிச் சொன்னவுடன், “அவரைக் கொஞ்சம் வரச் சொல்லுங்கோ ஜிஎன்றார். வெங்கடாசலத்தை அழைத்து, கபூர் சாபிடம் ஒப்படைத்தேன். “நீங்களும் இங்கேயே இருங்கஎன்று பணித்தார். வெங்கடாசலத்திடம் “ஐயா, ஏதோ வடக்கத்தியான்னு நினக்காதீங்க. தமிழ் சுத்தம்.என்றேன் வெங்கடாசலத்திடம். “உட்காருங்க என்ற கபூர் சாபின் வேண்டுகோளுக்கு, “நான் எப்படிங்க அதிகாரி முன்னாடி……..” என்று நெளிந்து அமர மறுத்து விட்டார்.

என்ன நடந்ததுன்னு சொல்லுங்க இது கபூர் சாப்.

“ஊர்ல கொஞ்சம் நெலம் இருக்கு சாமி. சாமி புண்ணியத்துல நல்ல விளச்சலு. இரண்டு பசங்க எனக்கு. இன்னிக்கு வெள்ளிக் கிழமைல்ல. செவாய்னன்னு மத்தியானம். பெரிய பையன் கஜா, அதான் கஜபதி, அவுங்க அம்மாவண்ட பேசினானாம். மூணாவது வீட்டு சோமசுந்தரத் தேவர் பெண்ணை, கல்பனாவை லவ் பண்றானாம். அவுங்க வீட்லேயும் ஒத்துக்குவாங்க போலத்தானாம். பெரிய இடம்மா அது. நான் வெறுங்கையோட எப்பிடிக் கட்டிக்கிறது. அப்பாக்கோ வயசாச்சு. நிலத்த எம் பேர்ல மாத்தச் சொல்லும்மா. அவுரே பராமரிக்கட்டும். பேரு மட்டும் எனதா இருந்தா போதும். தம்பி பரமேஸுக்கு தான் டிஎன்இபிலே ஜோலியிருக்கே. புழச்சுக்குவான்லே. நான் தான் இந்த டைலர் தொழிலைக் கட்டிக்கிட்டிருகேனே. வரும்படி இல்லாம இல்ல. ஆனா நிரந்தரமில்லையே.என்றிருக்கான்.

உள்ளார சின்னவரு இருந்தது இவனுக்குத் தெரியாது போல. இதையெல்லாம் கேட்டவன் சும்மா இருப்பானா? அது என்னது அது. சரி பங்கு போடச் சொல்லு. டிஎன்இபின்னா எனக்கு கல்யாணம் கார்த்தி வராதா என்ன? பதிலுக்கு அண்ணன்காரனும் பேசியிருக்கிறான். பேச்சு அதன் உச்ச வரம்பைத் தாண்டி விட்டிருக்கிறது. என் பெண்ஜாதி ரத்னம், பக்கத்து வீட்டுப் பையனைக் கூப்டு சைக்கிள்ல என்ன இட்டாறச் சொல்லிடுச்சி. வீட்ல இவனுங்களுகுள்ள பேச்சு மீறி அடிதடி வர்லும் போய்ட்டுதுங்க சாமி. சின்னவன் ஏதோ பாடி பில்டிங்க் எல்லாம் பண்ணி வாட்டசாட்டமா இருப்பான். பலசாலி. போட்டு பெரியவனை நல்லா வுட்டிருக்கான். காதுலேயும் மூக்கிலேயும் ரத்தம். இவ, என் பெண்ஜாதி ரத்தத்தைப் பாத்த ஒடனேயே மூர்ச்சையாய்ட்டா சாமி.

நான் சைக்கிள்ல வந்த பையன் மிதிக்க, வீட்டுக்கு வந்து பாத்தா பெரியவன் செத்துக் கெடக்கான். அரிவாளு கெடக்கு பக்கத்துலே. சின்னவன் எங்கேயோ ஓடிட்ருக்கான். சரிங்க அதெல்லாம் கதைங்க. எனக்கு கொள்ளி போட வேண்டியவன் எனக்கு முன்னாடி கட்டையிலே ஏறிட்டான். அவனுக்கு நிரந்தரமா வழியனுப்பணும்கிறது நான் வாங்கி வந்த வரமாயிட்டுது. அதான் சாமி, இப்பம் செலவெல்லாம் இருக்குது. அவன் கணக்குலெ இருக்கறது கிடைக்குமான்னுதான்....பேசி முடித்தார். அக்கம் பக்கத்தில் சப்தமிருந்தாலும், எங்களது குறுகிய வட்டத்தினுள் அமைதி நிலவியது. அதைக் கலைக்க வேண்டி கபூர் சாப், “பெரியவரே கொஞ்சம் உட்காருங்க.என்றார். என்னிடம் “காஷியர்ட சொல்லிடுங்க, ஒரு பேமண்ட் இருக்குன்னு. சீக்கிரமா ஃபார்மை பூர்த்தி செய்து என்னிடம் கொடுங்கஎன்றார். பாரத்தில் பெரியவருக்குப் பணம் வழங்கலாம் என்ற ஒப்புதலை கபூர் உடனுக்குடன் அளித்துக் கையெழுத்திட்டார். பெரியவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, “உங்களுக்கு சார்ஜ் ஏதும் இல்லையா சார்”.

எங்களுக்கு சம்பளமே நிறைய குடுக்கறாங்க. அது போதும். நீங்க ஒரு வேலை செய்யணும். டெத் சர்டிபிகேட் கிடைத்தவுடன் வங்கிக்கு ஒரு நகல் அனுப்பிடுங்கஎன்று வங்கி முகவரியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு, என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். நானும் என் பிடியை பலப்படுத்தினேன். அன்று அப்பொழுது அவர் என்னைப் பார்த்த பார்வை “ஒங்கப்பன் ரொம்பக் குடுத்து வைத்தவன்என்று கூறாமல் கூறியது.

இயல்பு வாழ்க்கையில் மற்றுமொறு குறுக்கீடு, வெங்கடாசலத்திடமிருந்து ஒரு பத்து நாட்களுக்குப் பின் வந்த கவர்.

இறப்புச் சான்றிதழ் காப்பியுடன், மேலே ஒரு சிறிய காகிதத்தில் “நன்றி, நன்றி. நல்லாருங்கோஎன்று எழுதப்பட்டிருந்தது. மனுஷன் இந்த எழுத்துக்களை எழுதக் கற்று, சிறியதும் பெரியதுமாக எழுதியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது.

கபூர் சாபிடம் கொண்டு காண்பித்தேன். ஜஸ்ட் சிடவுண். அந்த கேஸ்ல நான் எப்படி அவ்வளவு சீக்கிரமா முடிவெடுத்தேன் தெரியுமா? எனக்கும் அதே அனுபவம் தான். என் தம்பி இதே மாதிரி எங்க அப்பாட்ட ஒரு நாள் கேட்டான். அவன் பொண்ணுக்குக் கல்யாணம்னு காரணம் சொன்னான். அண்ட் யூ நோ? என் பெண்ஜாதி சங்கீதா அப்பிடியே குடுத்துடுங்க மாமான்னு என்னைக் கூடக் கேட்காமலேயே சொல்லிட்டாப்பா. அவளுக்கு ஆனா ஒரு ஆசை. அந்த பூமியிலே நல்ல உசத்தி பாஸ்மதி போட்டுருந்தார் எங்கப்பா. நல்லாவே விளையும். வருஷம் ஒருதரம் கொஞ்சம் அனுப்பச் சொல்லுங்க ஜி. என்றாள்.பெண்கள் முடிவெடுக்கும் விதமும் அவர்களின் ஆசைகளும் – ஒரு ஆராய்ச்சிக்கான தலைப்பல்லவா இது?

சீட்டிற்கு வந்தேன். வேலை ஓடுமா? எப்படி ஓடும்! நினப்புதான் ஒடியது. என்ன இதெல்லாம். கபூர் சாபிற்கும் வெங்கடாசலத்திற்கும் என்ன லின்க்? இடையில் என் பாகம் என்ன? எனக்குப் பங்குண்டா? இணைப்புகள் இவை போல் நிறைய என்றென்றும் உளவோ? நமது அவதானிப்புதான் போதவில்லையோ? எல்லை மீறிய யோசிப்போ? இல்லை வழக்கம் போல் எல்லாம் அவன் செயலோ? தம்பி அண்ணனைக் கொன்றது கூடவா?

No comments:

Post a Comment