Tuesday, October 25, 2011

தமிழில் கதை ஒன்று



இதுவும் சரித்திரம் தான்! (அல்லது அகலுதல்)




ஆர்வலன்.




வாழ்க்கையிலிருந்து பாடம் பெற்ற பிறகும் வாழ மறுப்பவர்கள் சிலர் உண்டு. என்னதான் தாங்கள் எடுத்த முடிவை நியாயப்படுத்தினாலும், மீளாத உலகிற்குச் சென்று விட்ட இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் மிச்சமிருக்கின்றன !

குனாலைப் பற்றித்தான் சொல்கிறேன். அலுவலகத்தில் பதித்த பெயர் எஸ் ராமசுப்ரமணியம். “அது என்னப்பா குனால்?”. முதலில் சிரித்து விட்டு பின் பதிலைச் சொன்னான். “பக்கத்து வீட்ல ஒரு சேட் இருந்தார். அவர் பேர் குனால். நான் மட்டும் சின்ன வயசுலேந்தே இந்தக் “குனால்” வார்த்தையை குலான் என்றே உச்சரித்துக் கொண்டிருந்தேன். ரொம்ப நாள் அது மாறவேயில்லை. அதனாலே அதுவே என்னைக் கூப்பிடுற பெயரா இருந்துடுத்து.”

கம்பெனியில் வேலை எல்லாம் சுத்தம். பல முறை ஜி எம் பத்மநாபன் குனாலின் கை எழுத்தைப் பாராட்டியிருக்கிறார். “போத் ஆர்டிஸ்டிக் அண்ட் ரீடபள்” என்று ஒரு முறை புகழ்ந்திருக்கிறார். இதன் காரணமாகவே கம்பெனிக்காக சின்னச் சின்ன போஸ்டர் எழுத குனால்தான். ஆங்கிலமும் சரி, தமிழும் சரி எல்லா எழுத்துக்களும் சரியான அளவையில் இருக்கும். காரியத்தில் கண்ணாக இருப்பான். குறுக்கே பேசிவிடக் கூடாது. இடது கையில் சிகரெட். “இதை ஏம்பா நிறுத்தலை” என்றால், முடியலியேப்பா என்பான்.

ஒரு நாள் - சார் ஒரு சின்ன ஹெல்ப் என்றான். கையில் ஏதோ ஒரு சிட் கம்பெனியின் விண்ணப்பம். கடன் தொகை ரூ 25000. என்னிடம் உத்திரவாதம் - ஷுரிடி, கேட்டான். “எதுக்குப்பா இது”, என்றதும் ஒரு முழு கதையைச் சொன்னான். வீடு கட்டும் பொழுது எஸ்டிமேட் கொஞ்சம் மீறி விட்டதாம். மனைவியின் நகைகளை வைத்து சரிக்கட்ட வேண்டியிருந்ததாம். “புவனா, பாவம் சார். நகை இல்லாமல் எந்த ஒரு விசேஷத்திற்கும் ஆஜராக யோசனை பண்ணறாள்.”. ஆம் இப்பொழுதெல்லாம் புன்னகையைவிட தங்க நகைகளில் தான் மக்கள் முதலீடு செய்கிறார்கள். அக்ஷய த்ரிதியை என்ற மீடியா கூத்து வருடா வருடம் நடக்கிறதே. அன்று ஒரு குந்துமணியாவது அந்த மஞ்சள் உலோகத்தை வாங்கிடணுமாம். புதிய மரபை உருவாக்கி நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நிற்க, குனாலிடம், கையெழுத்திடுவதற்கு முன் ஒரு வார்த்தை சொன்னேன் “பார்த்துப்பா, கடன் என்பது ஒரு வலை. மாட்டிக்காதே”.

இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி கடனைப் பெருக்கியுள்ளான். இந்த ஆட்டைத் தூக்கி மாட்டிலே போட்டு என்பார்களே. அது போலத்தான். ஒரு கடனை அடைக்க மற்றொன்று, அதைத் துரத்தியடிக்க இன்னொன்று. அவனை யார் காவல் காக்க முடியும். அவன் போக்கிலே எல்லாம் போய்க் கொண்டிருந்தது. கடன் அவனைப் பிடித்த சனியாகி விட்டது என்பதை ஒரு போன் கால் நிரூபணமாக்கியது. யார் என்று கேட்டுடுங்க சார் என்றான். பாரதியாரே ஆபத் தர்மத்திற்காக ஓரிரு பொய் சொல்ல அனுமதி தந்திருப்பதை மனதில் கொண்டு “ குனால் ஹாஸ் கான் அவுட் ஆன் எ ஜாப், வாட் இஸ் தெ மேட்டர் ?” என்றேன். எதிர் முனையிலிருந்து வந்த பதில் எனக்கு சில அதிர்ச்சி தரும் உண்மைகளை கண் முன்னே கொண்டுவந்தது. அவன் இந்த பிரதாப் சிட் ஃபண்டில் பெற்ற கடனுக்கு தவணையாகக் கொடுத்த செக் ரிடர்ன் ஆகிவிட்டதாம். குனால் தெரிந்தவராதலால், முதலில் அவனிடம் பேசி விட்டு, அதைப் பொறுத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளார்களாம். குனாலை முறைத்தேன். ஒரு வார்த்தை கூட வெளியில் வராமல் எங்கள் இருவரிடத்திலும் விஷய பரிமாற்றம் நடந்தது. சாயங்காலம் “இரண்டு நாள் லீவு வேணும் சார்” என்றான். உரிமையுடன் “விஷயம் என்னவோ?” என்றேன். வந்து சொல்றேன். ப்ளீஸ் - என்று நழுவி விட்டான்.

மூன்றவது நாள். வண்டியை அலுவலகத்தில் நிறுத்தும் போதே ஜி எம், “இங்கே வாங்க” என்று சைட் கண்ணாடி மூலம் கூப்பிட்டார். “ந்யூஸ் தெரியுமா? உங்களுக்கு. கொஞ்சம் க்ளோஸ் ஆச்சே?” என்ற அறிவிப்புடன் அவர் கொடுத்த செய்தி..........“தலை சுத்தறது, சார்”, என்று என்னைத் தடுமாற வைத்தது. நாற்காலியின் கைப்பிடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இப்பொழுது நினைத்தாலும் உடலில் ரத்தமே ஓடாதது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. “என்ன, கொஞ்சம் துக்கமும் கொஞ்சம் ஆத்திரமும் வர்றதோ?”. மனுஷன் அனுபவ சைகாலஜி நன்றாய் படித்திருக்கிறார். “ ந்யூஸ் இப்படியிருப்பதால், எல்லாரும் வீட்டிற்கெல்லாம் போகவேண்டாம்” என்று ஒரு எச்சரிக்கை கொடியையும் ஏற்றி வைத்தார். நானும் சுற்றறிக்கையில் செய்தியைக் கொடுத்தேன். நோட்டீஸ் போர்ட் வேண்டாம் என்று ஸ்டாஃப் புனிதனிடம் செய்கை காட்டி, “எல்லார்டையும் காட்டிடுங்க தம்பி” என்றேன். அதை எழுதும் பொழுது கையில் நகம் ஆரம்பிக்கு இடம் வரையில் வியர்த்திருந்தது.

எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர். எல்லாம் ஜாடை மாடையாகத் தெரிந்து வைத்திருந்தனர் போலும். அவர்கள் என்னைக் கேட்ட கேள்விகள் “என்ன சார்.......ஏன் சார் இப்படி.......” என்பவையே. சிலர் என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். லேடி ஸ்டாஃப் எல்லாம் என் அருகில் வந்து ஏதோ ஜபம் செய்வது போல் நின்று விட்டு இருக்கைக்குச் சென்றனர். அலுவலகம் என்பதால் அனைவருமே தங்களை அடக்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் சிறிய அளவில் சாயங்காலம் ஒரு இரங்கல் கூட்டம். என்னால் பேச முடியாது என்று தவிர்த்து விட்டேன். இரண்டு காரணங்கள் - நிச்சயம் உணர்ச்சி வசப்பட நேரிடும். “சார் இவ்வளவு எமோஷனல் என்று தெரியாதே” என்று எல்லோரும் எனக்கு ஒரு பட்டத்தைக் கட்டி விடுவார்கள். இதை விட முக்கியம். ஒரு குற்ற உணர்ச்சி. கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தும் கறாராக ஒன்றும் செய்யாமல் போனது. கூப்பிட்டுப் பேசியிருக்கலாம். தேவை என்றால் ஓங்கி ஒரு அறை கூட விட்டிருக்கலாம். அலுவலகத்தில் ஏற்படும் உறவுகள், ஒரு நெருக்கம், ஒரு சூழல், ஒரு இதம் - எல்லாம் அங்கே வேலை செய்பவர்களுக்கு நன்றாய் விளங்கும்.

நாட்கள்....... அதற்கென்ன.......நகர்ந்தது, - ஓடவும் செய்தது. அவன் சீட் வேலையும் பகிர்ந்து கொடுக்கப் பட்டது. தலைமை அலுவலகமும் இரண்டொரு மாதங்களில் வேறு ஆள் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஜி எம் உருக்கமான ஒரு கடிதம் எழுதினார். அனைவரும் படித்தனர். நாங்களும் குனால் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டோம். போலீசும் ரொம்ப தொந்தரவு கொடுக்கவில்லை. இரண்டு முறை வந்திருந்தனர். அவ்வளவுதான்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள்.காசாளர் கோமதியிடம் பணம் பெறச் சென்றேன். பணத்தைக் கொடுத்துக் கொண்டே “ இந்த அளவிற்குப் போகும் என்று யார் சார் எதிர்பார்த்தார்கள்?” என்றார்கள். குனாலைப் பற்றித்தான் பேச்சு. “ஆமா. படுபாவி. அவனவன் பொதுப் பணத்தை வாங்கி ஃபைனான்ஸ் கம்பெனி என்று ஆரம்பித்து நிறையச் சேர்ந்தவுடன் தலை மறைவாகிறார்கள். இவனைப் பாருங்க? என்ன அப்படி மீள முடியாத கண்டிஷன்? தற்கொலை முயற்சி என்றும், கடைசியில் காப்பாற்றப் பட்டதும் கேள்விப் பட்டிருக்கிறேன். இது என்ன நம் கண் முன்னே? எனக்கு மனசு உறுத்தரதும்மா? குறுக்கே பாய்ந்து ஏதும் செய்யத் தவறி விட்டேனோ? கவிஞர் புவியரசு கூறிய தற்காலத்து காந்தி குரங்குகள் போல எதையும் பார்க்காமல், எதையும் கேளாமல், எதையும் பேசாமல் இருந்து விட்டாய் என்று என் மனசாட்சி எனக்கு சாட்டையடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவனை நினைத்து நினைத்து நான் வெசனப் பட்டாலும், அவனை என்னால் மன்னிக்க முடியவில்லை. என்னையும்தான்”

“மேடம் ஒரு பேமென்ட் வச்சிருக்கேன்”” என்ற புனிதனின் குரல் நிகழ் காலத்தில் நாம் இருப்பதை உணர்வித்தது.

No comments:

Post a Comment